tamilnadu

img

வாங்கும் சக்தியும் அதீத உற்பத்தியும்

“2019 - 2020 நிதியாண்டில், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியப் பொருளாதாரத்தை ஐந்து லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற்றுவதற்கான பயணத்தை துவக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு கனவுத் திட்டத்தை முன் வைத்திருக்கிறார். விவசாயம், உற்பத்தித் துறை மற்றும் சேவைத்துறை மூன்றும் இணைந்து மிகப்பெரும் பங்களிப்பினைச் செய்தால், இந்த இலக்கை எட்ட முடியும். ஆனால் இன்றைய உண்மை நிலவரம் - கடந்த சில மாதங்களாக இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள துறைகளில் ஒன்றான ஆட்டோமொபைல் (மோட்டார் வாகனம்) உற்பத்தி தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஆட்டோமொபைல் துறையின் நிலவரம் மிகவும் மோசமானதாக இருக்கிறது. இத்துறையின் வளர்ச்சி வேகமாக சரிவை சந்தித்திருக்கிறது. மோட்டார் வாகனங்களுக்கு உடனடியாக போதிய கிராக்கி உறுதி செய்யப்படவில்லை என்றால் மிகப்பெரிய அளவிற்கு வேலைஇழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இது ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். எனவே உடனடியாக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்”.

இந்திய முதலாளிகளின் சங்கமான இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) பொதுச் செயலாளர் சந்திரஜித் பானர்ஜி, 2019 ஆகஸ்ட் 6 அன்று ஆசியன் ஏஜ் ஏட்டில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டவை. சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு மோடி - 2 ஆட்சி பொறுப்பேற்றவுடன் தாக்கல் செய்யப்பட்ட நிர்மலா சீதாராமனின் முதலாவது பட்ஜெட்டை விழுந்து விழுந்து வரவேற்றவர்களும் இந்த பெருமுதலாளிகளின் சங்கம்தான். இப்போது குய்யோ முறையோ என்று குமுறுகிறார்கள். இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை படிப்படியாக சரிந்து, தற்போது முற்றாக தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உற்பத்தியை குறைக்கவும் நிறுத்தவும் வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தேங்கி நிற்கும் வாகனங்களை என்ன செய்வது என்று முதலாளிகள் குழம்பிப் போய் உள்ளனர். வாகனங்களை யார் தலையில் கட்டுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. எல்லாம் தனியார்மயம் என்று முழங்கிக் கொண்டிருந்த பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் இப்போது, அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்கிறார்கள். தங்களை மீட்க அரசு நிதி தர வேண்டும் என்று சொல்கிறார்கள். தங்களது நிறுவனங்களில் தேங்கியுள்ள வாகனங்களை வாங்குவதற்கு பொதுமக்களின் கைகளில் ‘வாங்கும் சக்தி’ இல்லை என்றும் அவர்களது வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதத்தில் கடனுதவி செய்ய வேண்டும் என்று புதிய புதிய கோரிக்கைகளை முதலாளிகளே வைக்கத் துவங்கியிருக்கிறார்கள். நாட்டு மக்களிடம் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது பல்லாண்டுகாலமாக இடதுசாரிகள் இடைவிடாமல் கூறிக்கொண்டிருக்கிற விசயம்தான். அதை நேற்று வரையிலும் காதில் போட்டுக் கொள்ளாத முதலாளிகள், தற்போது தங்களது லாபம் பறிபோகிறது என்றவுடன் கூப்பாடு போடத்துவங்கியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

முதலாளித்துவ பொருளாதார விதிகளின்படி, ஒரு பொருளின் உற்பத்தியையும் அது தொடர்பான அனைத்து அம்சங்களையும் சந்தையே தீர்மானிக்கிறது. சந்தையில் உற்பத்தி பொருளுக்கு கிராக்கி இருக்கும் வரை மட்டுமே லாபம் குவியும். கிராக்கியில் வீழ்ச்சி ஏற்படும் பொழுது லாபம் மளமளவென சரியும். பொருட்கள் தேங்கும். உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். அத்துறையின் பொருளாதாரமே உடனடியாக பின்னோக்கி சுழலத் துவங்கிவிடும். மாமேதை மார்க்ஸ் 150 ஆண்டுகளுக்கு முன்பே இதை விரிவாக ஆராய்ந்தார். முதலாளித்துவத்தின் ஒவ்வொரு நெருக்கடியும் அதன் அதீத உற்பத்தியின் விளைவாக ஏற்படுகிற நெருக்கடியே என்றார். வேலைவாய்ப்பை உருவாக்காமல்; நுகர்வோரின் கைகளில் பணம் புழங்கச்செய்யும் விதத்தில் அவர்களது கூலியை அல்லது ஊதியத்தை தொடர்ந்து உயர்த்தாமல்; நுகர்வோரின் கைகளில் பணம் புரள்வதற்கான விவசாயம் மற்றும் பல்வேறு உற்பத்தித் துறைகளை சீர்செய்யாமல்; மொத்தத்தில் நுகர்வோரின் வாங்கும் சக்தியை மேம்படுத்தாமல், கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட பொருளை விற்க முடியாது. இந்த நிலையில் அதீதமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் நிச்சயம் தேங்கும். பொருட்கள் தேங்கினால் பொருளாதாரமும் தேங்கும். அது முதலாளியின் அதீத லாபவெறிக்கு இடையூறாக அமையும். பொருள் விற்காததால், லாபம் கிடைக்கவில்லையே என்ற வெறியில் ஏற்கெனவே தொழிலாளிக்கு அளித்துக் கொண்டிருக்கும் சம்பளத்தை வெட்டுவது, அவர்களது சலுகைகளை பறிப்பது என கொஞ்சநஞ்சம் அவர்களது கையில் புழங்கிக் கொண்டிருக்கும் பணத்தையும் முதலாளி பறிப்பான். இதன் விளைவு நுகர்வோராக இருக்கிற தொழிலாளியின் கைகளில் இருந்து வாங்கும் சக்தி முற்றாக பறிக்கப்படும். இது இன்னும் தீவிரமாக உற்பத்திப் பொருள் தேக்கத்திற்கும் அதன் தொடர் விளைவாக உற்பத்தி நிறுத்தத்திற்கும் அதன் தொடர் விளைவாக ஆலை மூடலுக்கும் இட்டுச் செல்லும்.

இந்த நிலையில் எங்களது லாபத்தை மீட்டுக்கொடு என்று முதலாளிகள் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பார்கள். அவர்கள் தொழிலாளியின் கைகளில் அல்லது நுகர்வோரின் கைகளில் பணம் கொடு என்று சொல்லமாட்டார்கள். நுகர்வோரின் கைகளில் இருப்பதையும் பறித்து எங்கள் கைகளில் கொடு என்று நிர்ப்பந்திப்பார்கள். அதற்குப் பெயர்தான் மீட்புநிதி. இப்போது இந்திய பெருமுதலாளிகளுக்கு அப்படி கொடுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்திய மோட்டார் வாகனத்துறை மீள்வதற்கும் அதன் மூலம் மேற்படி முதலாளிகளே மீள்வதற்கும் மீட்புநிதி தீர்வல்ல. மீட்புநிதியை 2008 உலகப்பொருளாதார நெருக்கடியின்போது அமெரிக்க முதலாளிகளும் உலகின் இன்னபிற கார்ப்பரேட் பெரும் முதலாளிகளும் எப்படியெல்லாம் சூறையாடினார்கள் என்பதை இந்த உலகம் அறியும். அப்படி சூறையாடியதன் விளைவாகத்தான் இன்றைக்கும் பத்தாண்டுகள் கழித்தும் கூட உலக முதலாளித்துவத்தால் மீட்சிபெற முடியவில்லை. எனவே இந்திய மோட்டார் வாகனத்துறையில் உடனடியாக வீழ்ச்சியை தடுக்கவும் அதிலிருந்து மீளவும் வேண்டுமென்றால், 

மோடி அரசு தனது நாசகர பொருளாதாரக் கொள்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். உதிரி பாகங்கள் உள்பட அனைத்துப் பொருள்களுக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி என்பதை உடனடியாக குறைக்க வேண்டும். வங்கி கடன் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கியுள்ள பல லட்சம் கோடி ரூபாய் வராக்கடனை தயவு தாட்சண்யமின்றி வசூலித்திட வேண்டும். வாக்குறுதிப்படி 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும். ரயில்வே உட்பட மத்திய அரசுத்துறைகளில் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும். இந்திய கிராமப்புற மக்களின் அடிநாதமாக இருக்கிற மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை உடனடியாக பலப்படுத்திட வேண்டும். விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும் மட்டுமல்ல; சிறு-குறு, நடுத்தர தொழிற்துறையினரும் பல்வேறு தொழில் வர்த்தகத் துறையினரும் கூட  வலியுறுத்தியுள்ளனர்.  இந்தக் கோரிக்கைகளுக்கும் மோட்டார் வாகன தொழில் மீட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று மோடியின் ஊதுகுழல்கள் கேட்கலாம். இவற்றை நிறைவேற்றினால்தான், முதலாளிகள் தங்களது பொருட்களின் நுகர்வோராகக் கருதும் இந்திய மக்களின் கைகளில் பணம் புழங்கத் துவங்கும் அவர்களது வாங்கும் சக்தி மெல்ல மெல்ல உயரும். வாங்கும் சக்தி இருந்தால் மட்டுமே சந்தையில் பொருட்கள் விற்கும்.

வேறு வழியே இல்லை நரேந்திர மோடி அவர்களே..!

- எஸ்.பி.ராஜேந்திரன்

;